முதல்வரின் வருகைக்கு பள்ளி குழந்தைகளின் வாகனங்களை பயன்படுத்துவதா! இது அராஜகத்தின் உச்சம் - அண்ணாமலை கண்டனம்!
இன்று பொள்ளாச்சிக்கு வருகை புரிந்துள்ள முதல்வர் மு க ஸ்டாலினின் வருகைக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் வாகனங்களை வற்புறுத்தி பெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாடியதோடு அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் இன்று பொள்ளாச்சி செல்லவிருப்பதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான வாகனங்கள் இல்லாமல், பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளியிறுதிப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில், தங்கள் விளம்பர அரசியலுக்காக, மாணவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் உரிமையை, திமுக அரசுக்கு யார் கொடுத்தது?
மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுகவின் இது போன்ற அதிகார துஷ்பிரயோகத்துக்குத் துணை செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒருபுறம், போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறி, தமிழக இளைஞர்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான, பொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், தங்கள் அரசியலுக்காக பள்ளி வாகனங்களை முறைகேடாக கட்டாயப்படுத்தி வாங்குவது, அராஜகத்தின் உச்சம் என்பதை விளம்பர விரும்பி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
Source : The Hindu Tamil thisai