தேர்தல் முடிவுக்கு பிறகு தென்படாத வி.கே.பாண்டியன் வெளியிட்ட வீடியோ...! தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு..!

Update: 2024-06-10 16:36 GMT

நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் ஒடிசா மாநிலம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று மாற்றத்தை கண்டுள்ளது. அதாவது 2000இல் இருந்து 14 ஆண்டுகளாக ஐந்து தேர்தல்களிலும், தனது வெற்றியை பதிவு செய்து, முதல்வராக ஒடிசாவில் ஆட்சி அமைத்து வந்த நவீன் பட்நாயக்கின் கோட்டை, இந்த முறை தரைமட்டமாகியுள்ளது. ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 51 தொகுதிகளை மட்டுமே பிஜேடி வெற்றி பெற்றது. மேலும் மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளில் இருபதில் பாஜக வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஒடிசாவில் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிப் பொறுப்பில் அமரவுள்ளது. இதனை அடுத்து, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நவீன் பட்நாய்க்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன் தலைமறைவாக இருந்து வந்ததாக பேச்சுக்கள் நிலவியது. 

ஏனென்றால் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக பார்க்கப்பட்டவரும், பிஜேடியின் தேர்தல் வேலைகள் அனைத்தையும், முன்னின்று நடத்தியவர் வி.கே.பாண்டியன். தேர்தல் சமயங்களில் பரபரப்பாக சுற்றி வந்த இவர் தேர்தல் முடிவு பிஜேடிக்கு படுதோல்வியை கொடுத்த பிறகு, பொதுவெளியில் அவர் தென்படாமல் இருந்தது பலருக்கு பல சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வி.கே.பாண்டியன். அதில், நவீன் பட்நாயக்கை பார்த்து அரசியலுக்கு வந்தவன். அவருக்கு உதவி செய்வதற்காகவே நான் அரசியலுக்குள் வந்தேன். ஆனால் தற்போது தீவிர அரசியலில் இருந்து விலக மனப்பூர்வமாக முடிவு செய்துள்ளேன். எனது இந்த அரசியல் பயணத்தில் யாரையாவது காயப்படுத்தி இருந்தால், அதற்காக வருந்துகிறேன். பிஜேடி கட்சியின் தோல்விக்கு நான் காரணமாக இருந்திருந்தால், அதற்கான மன்னிப்பை ஒட்டுமொத்த கட்சியினரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே ஐ.ஏ.எஸ் பணிக்கு வந்தேன். ஒடிசா மக்களின் அன்பை பெற்றேன். அதை தவிர வேறு எந்த சொத்துக்களையும் நான் இதுவரை சம்பாதிக்கவில்லை! ஒடிசாவின் பள்ளிகளை மேம்படுத்துவதில் நான் அரசு பள்ளியில் படித்த அனுபவம் கை கொடுத்தது. நவீன் பட்நாயக்கிடம் கற்றுக் கொண்டது என் வாழ்நாள் முழுமைக்கும் பயனளிக்கும் என கூறியுள்ளார். 

Tags:    

Similar News