தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்.. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி..
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் முழுமையாக திமுக பெரும்பான்மையான இடங்களை பெற்று இருப்பதாகவும், காங்கிரஸ் ஒதுக்கப்படுவதாகவும், சிலர் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இதன் காரணமாக வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி இடலாம் என்ற முழக்கத்திற்கு காங்கிரஸ் தரப்பில் ஒருமித்த ஆதரவு கிடைத்து இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில், திமுகவுடன் கூட்டணியா? அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்து ஆராய்வதற்கு நடந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக தலைவர்கள் பேசியதற்கு எதிர்ப்பு வெடித்தது இருக்கிறது.
மேலும் இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன் கூட்டத்தில் பேசும் பொழுது, "சட்டசபை, லோக்சபா தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுகிறது. இந்த இரு தேர்தல்களுக்கு நாம் பணம் செலவு செய்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் போது செலவு செய்தால், கட்சி வெற்றி பெறும். கட்சியின் கட்டமைப்பு வலுவடையும்; தொண்டர்களும் உற்சாகம் அடைவர்" என்று கூறியிருந்தார். மேலும் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூட்டத்தில் பேசும் பொழுது, "லோக்சபா தேர்தலில், 100 சதவீத வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் உழைப்பு மகத்தானது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், எத்தனை இடங்களை பெற வேண்டும்? என்பதை முன்கூட்டி பேசுவதற்கு குழு ஒன்றை அமைக்க வேண்டும்" என கூறினார். இப்படி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவர்களில் சிலர், திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், முதல்வர் ஸ்டாலினை பாராட்டியும் பேசிய போது, தொண்டர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
"தேர்தல் வெற்றிக்கு ராகுல்காந்தி தான் காரணம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்" என்று சில தலைவர்கள் பேசியதை, தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். எனவே நடக்கின்ற நிகழ்வுகளை வைத்து பார்த்தால் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் விரும்புகிறார்கள். இனி, திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது அவர்களுடைய கூட்டணியில் விழுந்த விரிசலாக பார்க்கப்படுகிறது.
Input & Image courtesy: News