அரசியலில் கவனம் பெறும் திமுக - காங்கிரஸ் உரசல்...! காங்கிரஸ் எம்பி'யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர்!

Update: 2024-06-14 09:21 GMT

காங்கிரஸில் காமராஜர் போன்ற வலுவான தலைவர்கள் இருந்தபோதிலும் 1967இல் திமுக காங்கிரசை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது. அதற்கு பிறகு 57 ஆண்டுகள் கடந்து விட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து செயல்படுவதற்கான கட்டமைப்பும், வாக்கு வங்கியும் போதுமானதாக இல்லை என்ற விமர்சனங்கள் பரவலாக இருக்கின்ற நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் திமுகவை ஆதரிக்கிறது. ஆனால் தோழமை என்பது வேறு, சார்ந்து இருத்தல் என்பது வேறு, எத்தனை நாட்களுக்கு நாம் சார்ந்திருக்க போகிறோம் என்று குறிப்பிட்டு பேசினார். 

இது தமிழக அரசியல் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தேர்தல் முடிந்த பிறகு காங்கிரஸ் தன் வேலையை காட்டுகிறது என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு, கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் பேசினேன், திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பேசவில்லை என்று செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்தார். 

இதனை அடுத்து, சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் நேற்று சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஆய்வு செய்த பொழுது, பொதுக் கழிப்பறை கடும் துர்நாற்றத்தில் வீசி உள்ளது. இதனால் கழிப்பறை உள்ளே சென்று ஆய்வு செய்யாமல், அதனை கடந்து சென்றார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம். காங்கிரஸ் எம்பியின் இந்த ஆய்வின் பொழுது திமுக பிரமுகர் குமாரசாமி என்பவர், முதல்வர் ஸ்டாலின் கூறியதால் தான் உங்களுக்கு வாக்களித்தோம். சிவகங்கை நாறி கிடக்கிறது. உங்களுக்கு ஓட்டளித்து என்ன பயன் என சரமாரியான கேள்விகளை முன் வைத்தார். இதனால் சில நிமிடங்களுக்கு அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. 

இப்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சமீபத்தில் எத்தனை நாட்களுக்கு இப்படி சார்ந்து இருக்கப் போகிறோம் என பேசியது, இரு கட்சிக்கும் விரிசலா என்ற விமர்சனத்தை எழ வைத்துள்ளது, இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்பியிடம் திமுக பிரமுகர் கொந்தளித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. 


Tags:    

Similar News