இந்திய விடுதலை போராட்ட வீரர், வ.உ.சி -யின் சீடர் திருநெல்வேலி வாஞ்சிநாதன் நினைவு நாள் : தலைவர்கள் அஞ்சலி

Update: 2024-06-19 11:53 GMT

சுதந்திரப் போராட்ட வீரரும், வ.உ.சிதம்பரனாரின் சீடருமான வாஞ்சிநாதன் நினைவு நாள் கடந்த திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதை ஒட்டி வாஞ்சிநாதனுக்கு தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டி செய்தி வெளியிட்டுள்ளனர். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் திரு.வாஞ்சிநாதனை அவர் உயிர் நீத்த நாளில் தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், பெருமையுடனும் நினைவுகூர்கிறது. சொந்த ஊர் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சொல்லொணா அட்டூழியங்களை தன்னால் தாங்க முடியாதபோது, வாஞ்சிநாதன் காலனித்துவ சக்திக்கு சவால் விடுத்து, திருநெல்வேலியின் அடக்குமுறை மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை படுகொலை செய்தார். எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது தனியாத துணிச்சல், தேச சுதந்திரம் மீதான காதல் மற்றும் நாட்டுக்கான அவரது உச்சபட்ச தியாகம் ஆகியவை ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது என தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், நாட்டு விடுதலைக்காக, இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அடக்குமுறையைக் கையாண்ட ஆங்கிலேய ஆட்சியாளர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று, தேச விடுதலைக்காக தன்னுயிரையும் கொடுத்த மாவீரன் வாஞ்சிநாதன் அவர்கள் நினைவு தினம் இன்று. வாஞ்சிநாதன் அவர்களின் தன்னலமற்ற துணிச்சல், விடுதலைப் போராட்டத்துக்கு புது உத்வேகம் அளித்தது என்றால் அது மிகையாகாது. அவர் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறோம் என்று பதிவிட்டுள்ளார். 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுதந்திர போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களை சிறையில் தள்ளிய ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை சுட்டுக் கொன்றதோடு, தாய் திருநாட்டிற்காக தன்னுயிரையும் அர்ப்பணித்த மாவீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவுதினம் இன்று. இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக தனக்குத் தானே முடிவுரை எழுதி, மக்களிடம் உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தட்டி எழுப்பிய புரட்சியாளர் வாஞ்சிநாதன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம் என்று கூறியுள்ளார்.

 

Tags:    

Similar News