அரசு அதிகாரிகளையும்,காவல் துறை அதிகாரிகளையும் மிரட்டி வரும் திமுக முக்கிய புள்ளிகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு சொல்வது என்ன?
தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உலுக்கிய சம்பவம் கள்ளச்சாராய உயிரிழப்புகள். இதில் இதுவரை 56 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சிக்கு சென்று உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செல்லவே இல்லை. மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதற்கு ஆளும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களே உறுதுணையாக இருந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையானது அதிகரித்து வருவதை தெரிந்து, அது குறித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முன்பு அப்பகுதியில் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மேல் இடத்தில் கூறமுற்பட்டும், கள்ளச்சாராயத்தை தடுக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டும் அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதால் விருப்பு ஓய்வு பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சிகர தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் திரு. மோகன்ராஜ் அவர்கள். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். ஒரே நாளில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணி செய்து வந்த 25 காவலர்களை இடமாற்றம் செய்தார்.
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இத்தனை தீவிரமாக இருந்த திரு. மோகன்ராஜ் அவர்கள், பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. ஆனால், அதற்கு காவல்துறை சார்பில் மழுப்பலான ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. திரு.மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.