கள்ளச்சாராய விவகாரம்.. சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது?

Update: 2024-06-25 13:37 GMT

3வது நாளாக அதிமுக உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து சட்ட பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து கருப்பு சட்டையை அணிந்து வந்து இருக்கிறார்கள். பின்னர் சபாநாயகர், அவை செயல்படுத்துவதற்கு இடையூறாக உள்ள அதிமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்ற அறிவித்து, இன்று ஒரு நாள் அவை நடவடிக்கைளில் பங்கேற்க கூடாது என்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பிறகு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறப்பட்ட பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, "அரசுக்கு மனமிருந்தால் கேள்வி நேரத்துக்கு முன்பு மக்கள் பிரச்சினையை பேச அனுமதி வழங்கியிருக்கலாம். சட்டப்பேரவையிலும் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளனர். இது கொடுங்கோல் ஆட்சியாகும். விதி என்று சொல்லி மக்கள் பிரச்சினையை முடக்க முடியாது. இதற்கு முன்பெல்லாம் கூட கேள்வி நேரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசு அலுவல்கள் மேற்கொண்ட வழக்கம் உண்டு. எனவே கேள்வி நேரத்துக்கு முன்பாக பேச அனுமதிக்க மாட்டோம் என்பதெல்லாம் தவறான செயலாகும். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க அனுமதி வழங்கலாம். அரசுக்கு மனமிருந்தால் செய்யலாம்" என்று சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.


அவையிலிருந்து வெளிநடப்பு செய்த பாமக MLA ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் உள்ளே நடந்ததைக் குறிப்பிட்டு பேசுகையில், "10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து கடைசியில் இருக்கும் மாவட்டங்கள் வன்னியர்கள் வாழக்கூடிய பின்தங்கிய வட மாவட்டங்கள். இவையெல்லாம் போக்கவேண்டுமென்றால் நிலுவையில் இருக்கின்ற 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும்" என்று பேசியதாக கூறினார். 

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்கள் கூறும் பொழுது, "கள்ளக்குறிச்சியில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் அத்தனை பேரின் மனதையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய சாவை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் தற்போது அளவுக்கு அதிகமாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை மாவட்டங்களில் இது தொடர்ந்து நடக்கிறது என்பது தெரியவில்லை. மக்களை போதையில் தள்ளாடும் அரசாக மாற்றி இருக்கிறது இந்த அரசு. ஒருபுறம் கஞ்சா, போதைப்பொருட்களால் சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்,மறுபுறம் இப்படி கள்ளச்சாராயத்தால் இளம் விதவைகளை தமிழகத்தில் உருவாக்கும் அரசாக திராவிட மாடல் இருப்பதாக" அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News