சந்துருவின் அறிக்கை இந்து விரோதமானது.. கிழித்து எறிந்த பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன்..
லோக்சபா தேர்தலுக்குப் பின் முதல் முறையாக சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் அவர்கள் சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஜாதிப் பாகுபாடுகளை நீக்குவது குறித்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருவின் சமீபத்திய அறிக்கையைக் கண்டித்து கடுமையாக பேசினார். அத்துடன் கவுன்சிலர் உமா ஆனந்தன் மாநகராட்சி கூட்டத்திலேயே ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை நகலை கிழித்து எறிந்தார்.
அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர் உமா ஆனந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் பல்லடம் பக்கத்தில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ சுடுகாட்டில் விடவில்லை. இதை பற்றி எல்லாம் நீதிபதி சந்துரு பேசியிருக்க வேண்டும். ஒரு தலைபட்சமான அறிக்கை, ஒரு தலைபட்சமான நீதிபதியை வைத்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு சென்னை மாநகர மாமன்ற கூட்டம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதனால் நீதிபதியின் அறிக்கையை நான் கிழித்து வீசினேன் என்று கூறி உள்ளார். உமா ஆனந்தனின் நடவடிக்கைகளும், அதைத் தொடர்ந்து அவர் தெரிவித்த கருத்துகளும் சபைக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் குறிப்பிடத்தக்க சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதி சந்துரு கமிட்டி தாக்கல் செய்த அறிக்கை இந்து மதத்திற்கு எதிரானதாகவும் , இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்களை மட்டுமே தாக்கும் வகையில் இருப்பதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: The Commune News