திமுக அரசின் மெத்தன போக்கையும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவையும் வெளிச்சம் போட்டு காட்டிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை-அஇமுக கட்சியின் தேசிய தலைவர்!
பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை பல தலைவர்களும் எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அஇமுக கட்சியின் தேசிய தலைவர் கோ. சத்யநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுபோன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் . சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் .
தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் மாநிலத் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கண்காணிக்கத் தவறிய உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்து இருப்பதோடு தமிழகத்தில் இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை.
அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறும் கொலை சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அஇமுக கட்சியின் தேசிய தலைவர் கோ.சத்யநாராயணன் கூறியுள்ளார்.
SOURCE :Newspaper