ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்ந்து மாட்டும் திமுக நிர்வாகிகள்! திடீர் என்கவுண்டர்..! சரியான முறையில் செல்கிறதா விசாரணை?

Update: 2024-07-14 11:01 GMT

கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை மர்ம நபர்கள் சூழ்ந்து அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இவரது மரணத்தை தொடர்ந்து திருவேங்கடம் உட்பட எட்டு பேரை சென்னை பெருநகர போலீசார் கைது செய்தது . மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலையானது 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆற்காடு சுரேஷ் கொலைகான பழிவாங்கல் கொலைதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இப்படி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கொலையாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டதில் உண்மைத்தன்மை இல்லை, தற்போது கைது செய்யப்பட்டவர்கள் கூலிக்காக கொலை செய்பவர்கள் மட்டும் தான்! உண்மையான குற்றவாளிகள் பற்றி விசாரணையை மேற்கொள்ள சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் உட்பட பாஜக, அதிமுக மற்றும் தமிழகத்தின் மற்ற கட்சிகளும் திமுக அரசை வலியுறுத்தியது. 

ஆனால் இந்த வழக்கில் திமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ள நாசரின் ஆதரவாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது பெருமளவில் பேசு பொருளாக மாறியது. மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் பேரில் திமுகவின் கிளை செயலாளர் உட்பட மூன்று பேரிடம் காவல்துறை விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. 

அதாவது கைது செய்யப்பட்ட 11 பேரிடமும் போலீசார் தனித்தனியாக மேற்கொண்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பத்து நாட்களாக இவர்கள் நோட்டமிட்டதும், கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திருமலையுடன் சேர்ந்து பொன்னை பாலு கூட்டாளிகள் பெரம்பூரில் உள்ள ஒரு மது கடையில் மது அருந்திக்கொண்டு திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி கொலை சம்பவத்திற்கு பின்னர் வழக்கறிஞர் அருள் தனது உறவினர் வீட்டில் கொலைக்கான ஆயுதங்களை வாங்கி பதுக்கி வைத்துள்ளதும் அருளிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஆனால் இன்று காலை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து எடுத்து வரச் சொல்லும் பொழுது குற்றவாளி திருவேங்கடம் தப்பிக்க முயன்றதாக அவரை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். இதற்கு பின்னால் நிச்சயம் ஒரு சதி இருக்கும் எனவும், தொடர்ந்து திமுகவின் நிர்வாகிகள் இந்த விவகாரத்தை கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதால், தானாக சரணடைந்த குற்றவாளி எப்படி தப்பி செல்ல முற்படுவார். இதற்குப் பின்னால் நிச்சயம் அதிகாரத்தில் இருப்பவர்களின் தலையீடு இருக்கும் என எதிர்கட்சி தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. 

இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். 

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News