திறனற்ற விடியா தி.மு.க ஆட்சியில் தமிழக பல்கலைக்கழகங்கள் ஆட்டம் கண்டுள்ளன.. உயர்கல்வியை பாழ்படுத்தும் தி.மு.க: திராவிட மாடலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

Update: 2024-07-20 17:34 GMT

எக்காலத்திலும் அழியாத கல்விச் செல்வத்தை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் ஊதியம் வழங்குவதற்குக் கூட நிதியில்லாமல் தடுமாறிக் கொண்டு இருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் கடும் நிதி நெருக்கடிகள் நிலவுகின்றன. இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பல்கலைக் கழகங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் , அண்மையில் தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளித்தது.


மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என தமிழகத்தில் இருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் மாத ஊதியம் கூட வழங்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு உரிய தீர்வு காண வேண்டிய அரசு, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது கடும் கண்டனத்திற்குரியது.


இந்நிலையில், "ஆளுநரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் திமுக அரசு நடத்தும் விளம்பர அரசியல் நாடகத்தால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்காமலும், நிதி நிர்வாகம் செய்யத்தவறியும் மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் கூறியுள்ளார்.


இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறும் போது, "தமிழ்நாட்டில் அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களில் 13ல் 12 நிதிப் பற்றாக்குறையால் செயல்பட முடியாமல் திணறி வருவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியம், கட்டுமானப் பராமரிப்பு என அடிப்படை தேவைகளுக்கே நிதி இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களைப் பாழ்படுத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கல்வியின் உறைவிடங்களான பல்கலைக்கழகங்களையே நிர்வகிக்கத் திராணியற்ற மு.க.ஸ்டாலின் தனது விடியா ஆட்சியை "திராவிட மாடல்" என்று மார்தட்டிக்கொள்வது வெட்கக்கேடானது.


ஆளுநரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் விடியா அரசு நடத்தும் விளம்பர அரசியல் நாடகத்தால் துணைவேந்தர்களை நியமிக்காமலும், நிதி நிர்வாகம் செய்யத்தவறியும் மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களின் நிதிநிலை குறித்து ஆராய்ந்து, உரிய நிதி ஒதுக்கி, மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News