திமுக எம்.பி தயாநிதி மாறனின் சாதிவெறிக்கு சவுக்கடி கொடுத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் : திஹார் சிறைக்கு செல்கிறாரா?

Update: 2024-07-24 12:32 GMT

மத்திய சென்னை எம்.பி ஆன தயாநிதிமாறன் கடந்த 2020 ஆம் ஆண்டு திமுக எதிர்கட்சியாக இருந்த சமயத்தில் அன்றைய தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்திப்பதற்காக சென்றிருந்தார். அவருடன் மற்ற திமுக எம்.பிகளான டி.ஆர்.பாலு, கலாநிதி வீராச்சாமி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் சென்று இருந்தனர். அந்த சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்து திமுக எம்.பிகள் தலைமைச் செயலாளர் தங்களை அவமரியாதை உடன் நடத்தியதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தனர். அப்பொழுது பேசிய டி ஆர் பாலு, தி இஸ்த ப்ராப்ளம் வித் யூ பீப்பிள் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் எங்களை பார்த்து கூறுகிறார், இதற்கு என்ன அர்த்தம் தயா? என்று எம்.பி தயாநிதி மாறனிடம் டி.ஆர்.பாலு கேட்க, அதற்கு பதில் அளிக்கும் விதமாக தயாநிதி மாறன் பத்திரிகையாளர்கள் மத்தியில், "தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்களை போன்று நடத்தினார், அவமரியாதையாகவும் நடத்தினார் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?"என்று ஆதங்கத்தோடு கொந்தளித்து பேசினார்.

தயாநிதியின் இந்த பேச்சு பெருமளவில் சர்ச்சையாக வெடித்தது. அதுமட்டுமின்றி ஒருவர் அவமரியாதையாக தங்களை நடத்தினார் என்றால், அதை விளக்குவதற்கு நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று தான் நீங்கள் கூறுவீர்களா? தாழ்த்தப்பட்டவர்கள் தான் அவமரியாதையாக நடத்தப்படுவார்களா? எதன் அடிப்படையில் இப்படி கூறினீர்கள் என்று தயாநிதி பேச்சுக்கு விமர்சனங்கள் எழுந்தது. மேலும் இதற்கு திமுகவின் கூட்டணி கட்சியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து கோயம்புத்தூர் சி.எம்.சி காலனியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் காவல் நிலையத்தில் தயாநிதி மாறன் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, தயாநிதிக்கு இந்த பேச்சு பெருமளவிலான சர்ச்சையை ஏற்படுத்திய பொழுதே, திமுக எம்.பிகளை தலைமைச் செயலாளர் தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில் தான் நான் கூறியிருந்தேன். அதைத்தவிர யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல, யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகியுள்ளது. இதுவரை இந்த சம்பவம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் வழக்கு குறித்த சர்ச்சை நடந்த இடம் சென்னை என்பதால் கோயம்புத்தூரில் தயாநிதி எம்.பி மீது போடப்பட்டிருந்த வழக்கை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு கையில் எடுத்துள்ளது. 

தயாநிதி எம்.பி மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது என்பதை அவரே மறந்த நிலையில் தற்போது இந்த வழக்கு விஸ்வரூபமாக மத்திய குற்ற பிரிவிற்கு மாற்றப்பட்டு இருப்பது தயாநிதியை மட்டுமின்றி அறிவாலய தலைமையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏனென்றால் வழக்கு விவகாரத்தில் ஏற்கனவே சிக்கி உள்ள முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி இதுவரை ஜாமினில் கூட வெளி வராதபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அனைவரும் மறந்த ஒரு வழக்கு மீண்டும் துளிர் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையில் தயாநிதி எம்.பி விரைவில் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராவார் என்றும் கூறப்படுகிறது. 

Tags:    

Similar News