தமிழகத்தில் குற்ற சம்பவங்களும் சட்ட ஒழுங்கும் கேள்விக்குறியாகி இருக்கும் இந்த ஒரு சமயத்தில் திமுக அரசு 18 கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்காமல், கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது, தி.மு.க.வின் அடிப்படை நிர்வாக அறிவை கேள்விக்குரியதாக்குகிறது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பாசகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும் பொழுது, "தமிழகத்தில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், 18 கிளைச் சிறைகளை மூட, திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அடிப்படை வசதிகளை மேம்படுத்தவோ, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிசெய்யவோ நடவடிக்கைகள் எடுக்காமல், கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது, திமுகவின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது.
தமிழகத்தில், குற்றச் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், தொடர்ந்து அதிகரித்து வருகையில், சிறைச் சாலைகளில், கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, சிறைச்சாலைகளில் போதிய இடம் இல்லாமல், ஒரே அறையில் அதிகமான எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைத்து, மனித உரிமை மீறலும் நடந்து கொண்டிருக்கையில், இருக்கும் சிறைச்சாலைகளை முறையாகப் பராமரிக்காமல் மூட முடிவு செய்திருப்பது, இதர சிறைச்சாலைகள் மற்றும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும்.
திமுக மூட முடிவெடுத்துள்ள கிளைச் சிறைகளில், நல்ல நிலையில் உள்ள சிறைகளும் உள்ளன என்று கூறப்படுகிறது. அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகளும், ஊழியர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, கிளைச் சிறைச்சாலைகளை மூடும் நடவடிக்கையைக் கைவிட்டு, அவற்றின் பாதுகாப்பை அதிகரித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News