தமிழகத்தில் தாது மணல் எடுக்க தடையா?.. மத்திய அரசின் செயலுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..

Update: 2024-08-01 13:46 GMT

குறிஞ்சான்குளம் பகுதியில் தாதுமணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ள மத்திய அரசுக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்து இருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள். மேலும் இது தொடர்பாக அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் போது, “குறிஞ்சான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தமிழக அரசும் இதற்கான ஒப்புதலை வழங்கியிருந்ததாக அறிகிறோம். ஆனால், குறிஞ்சான்குளம் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், தங்கள் பகுதியில் தாது மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்கங்களிற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டபோது அதை ரத்து செய்திடத் தமிழக பாஜக எடுத்த முன்னெடுப்பைப் போல, இந்த கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருந்தோம். மூத்த அரசியல் தலைவரும், வழக்கறிஞருமான, ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து, பொதுமக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, குறிஞ்சான்குளம் பகுதியில், தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.


பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று, குறிஞ்சான்குளம் பகுதியில் தாதுமணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ள மத்திய அரசுக்கு, தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பிலும், தென்காசி மாவட்ட பாஜக சார்பிலும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்காக மீண்டும் ஒப்பந்தப்புள்ளிகள் கோருகையில் அப்பட்டியலில் இருந்து குறிஞ்சான்குளம் நிரந்தரமாக நீக்கப்படும் என்ற நம்பிக்கை தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது" என்று அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News