மத்திய அரசு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசை கோபத்தில் விளாசிய அமித்ஷா..
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நிலைகுறித்த விவாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று நடைபெற்றது. வயநாடு துயரம் குறித்து இரு அவைகளிலும் எடுத்துரைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். இந்த இயற்கை சீற்றத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். இந்தப் பேரிடர் காலத்தில் நரேந்திர மோடி அரசு, கேரள மக்களுடனும், கேரள அரசுடனும் பாறை போல் உறுதியுடன் நிற்பதாக அவர் கூறினார். வயநாடு பகுதியில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு ஆகிய பணிகளில் மோடி அரசு, சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டிருப்பதாக அமித் ஷா கூறினார்.
2014-ம் ஆண்டுக்கு முன் பேரிடர் காலத்தில் மீட்பை மையப்படுத்திய அணுகுமுறை இருந்ததாகவும், 2014-ம் ஆண்டுக்குப் பின் மோடி அரசு உயிரிழப்பு இல்லாத அணுகுமுறையை நோக்கி செல்வதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசால் அனுப்பப்பட்ட தகவலின்படி, உரிய நேரத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது மாநில அரசுகளின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். இந்தப் பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது என்று கூறிய அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி,தொடர்ந்து நிலைமையை கவனித்து வருவதாகவும், நடைபெற்று வரும் நிவாரண, மீட்பு நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து அறிந்து வருவதாகவும் கூறினார்.
முன்னதாக மாநிலங்களவையில் இது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, இந்தப் பேரிடர் ஏற்படுவதற்கு 7 நாட்கள் முன்னதாக ஜூலை 23 அன்று கேரள அரசுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை செய்ததாகவும், இதன் பின் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளிலும் முன்னெச்சரிக்கை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக கனமழை பெய்யக்கூடும் என்றும், இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஜூலை 26 அன்று கேரள அரசுக்கு தெரிவிக்கப் பட்டது என்றும் அவர் கூறினார். முன்னெச்சரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று அவர் தெரிவித்தார்.