தி.மு.க ஆட்சிக்கு பின் பட்டியல் சமூக மக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு.. அண்ணாமலை குற்றச்சாட்டு..
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பட்டியல் சமூக மக்கள் மீதான தாக்குதல் அதிகமாக அரங்கேறி இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார். அது மட்டும் கிடையாது பட்டியல் இன மக்களை வெறும் வாக்கு வங்கிகளுக்காக மட்டும் தான் திமுக பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கங்களில் கூறும்பொழுது,"திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வழுதலம்பேடு கிராமத்தில், பட்டியல் சமூக மக்களைக் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்த திமுக ஊராட்சி மன்றத் தலைவி மீது, வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காலகாலமாக போலி சமூக நீதி நாடகமாடி, பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வரும் திமுகவின் உண்மை நிறம் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், பட்டியல் சமூக மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதோடு, அவற்றில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திமுகவினராகவே இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களைத் தடுக்கவோ, இவற்றில் சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவோ, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வருவதில்லை. மாறாக, பட்டியல் சமூக மக்களின் மீதான தாக்குதல்களை மௌனமாகவே கடந்து செல்கிறார்.
இதனால், பட்டியல் சமூக மக்கள் மீண்டும் மீண்டும் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். மேடைகள் தோறும் உதட்டளவில் பேசித் திரியும் திமுகவின் சமூக நீதி நாடகங்களால், பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை முதல்-அமைச்சர் உணர்ந்திருக்க வேண்டும். பட்டியல் சமூகப் பொதுமக்களைக் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: News