சவுக்கு சங்கர் வீடு மீது நடந்த தாக்குதல்: வன்மையான கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!

திமுக அரசு ஊழல் செய்கிறது என்பதை வெளிப்படையாக கூறிய காரணத்திற்காக சவுக்கு சங்கர் வீடு மீது நடத்தப்படும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழக பாஜக அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கூறும் பொழுது, துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும், என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் போது, தி.மு.க., அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது.
ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.