கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை.. பா.ஜ., தலைவர் எல்.முருகன் பேட்டி.!

கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை.. பா.ஜ., தலைவர் எல்.முருகன் பேட்டி.!

Update: 2020-12-22 18:27 GMT

கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ,க., கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு நீடிப்பதாக கூறப்பட்டதாக சில கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க., தலைவர் எல்.முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்: அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி தொடருகிறது. எந்த சலசலப்பும் இல்லை. வேளாண் சட்டத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போட்டு வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் தூண்டி விடப்பட்டுள்ளனர் என கூறினார்.

அண்மையில் முதலமைச்சர் வேட்பாளரை பா.ஜ.க., தலைமை தான் முடிவு செய்யும் என எல்.முருகன் கூறியிருந்தார். இந்த கருத்து அ.தி.மு.க.,வில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ளாவிடில் பா.ஜ.க., தனித்து போட்டியிட வேண்டியது தான் என கருத்துகளை தெரிவித்தனர்.

மேலும், எல்.முருகனின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அமைச்சர்களே எடப்பாடியை ஏற்றுக் கொண்ட பின், எல்.முருகன் சொல்வது ஒரு பொருட்டே இல்லை என்றெல்லாம் விமர்சித்தனர். இவ்வாறு அ.தி.மு.க., பா.ஜ.க.,வினரிடையே மோதல் போக்கு நீடித்து வருவதால், தேர்தல் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

இத்தகைய சூழலில், அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என எல்.முருகன் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News