40 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் களத்தில் ஊட்டி வேட்பாளர் போஜராஜன்! பா.ஜ.க வெற்றி மாலை சூடுமா?
தமிழக சட்டமன்ற தேர்தல்கள் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் களை கட்டி வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடும் பா.ஜ.க மூன்று வேட்பாளர்களை மட்டும் அறிவிப்பதை நிறுத்தி வைத்திருந்தது.
சமீபத்தில் அந்த பெயர்களையும் வெளியிட்டது. சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் வேட்பாளர்களை தேடித்தேடி முன்னணிக்கு கொண்டு வருவதில் பா.ஜ.க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அரவக்குறிச்சியில் போட்டியிடும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் சரஸ்வதி, நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் MR காந்தி, திட்டக்குடியில் போட்டியிடும் தடா பெரியசாமி ஆகியோர் சில உதாரணம்.
ஊட்டியில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் ஹிட்டக்கால் போஜராஜன் 40 வருடங்களுக்கு பிறகு அரசியல் களத்தில் மறுபடியும் இறங்குகிறார். தன்னுடைய சமூக சேவை நடவடிக்கைகளுக்காக அறியப்படும் இந்த தொழிலதிபர், 1980 இல் ஊட்டி காங்கிரஸ் வேட்பாளராக கிட்டத்தட்ட களமிறங்கினார் என்பது சுவாரஸ்யமான விஷயம்.
அந்த தேர்தலில் பெரும்பாலும் வெற்றி அடைவார் என அறியப்பட்ட போஜராஜனை கடைசி நேரத்தில் நீக்கிவிட்டு, காங்கிரஸ் கட்சி கோயம்புத்தூரிலிருந்து பிரபு என்பவரை போட்டியிட அழைத்து வந்தது.
இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த போஜராஜன் அரசியலில் இருந்து விலகி தேயிலை பயிரிடுவது, தேயிலை உற்பத்தி மற்றும் வேறு பல தொழில்களில் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.
தற்பொழுது 40 வருடங்களுக்குப் பிறகு அவர் பா.ஜ.க-வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தன்னுடைய எளிமைக்காகவும், மக்களிடையே உள்ள நல்ல தொடர்பினாலும் நல்ல பெயர் எடுத்திருக்கும் அவருக்கு பா.ஜ.க வாய்ப்பளித்து உள்ளது.