அ.தி.மு.க. கட்சியின் 'நமது அம்மா' நாளிதழ் நிறுவனர்கள்: ஓ.பி.எஸ். பெயர் நீக்கம்! தீவிரமடையும் ஒற்றைத்தலைமை!
அரசியல் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூன் 23ம் தேதி சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த பொதுக்குழுவில் மொத்தம் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். இதன் பின்னர் திட்டமிட்டப்படி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடைபெற்ற மண்டபத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் தாண்டி மண்டபத்திற்குள் சென்றபோது அவரை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒழிக, ஒழிக என்ற கோஷங்களுடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மண்டபத்திற்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் எழுந்து உற்சாக ஆரவார செய்து வரவேற்றனர். அதன் பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு தீர்மானங்களை முன்மொழிய, அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிவதாக தெரிவித்தார்.
அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான சி.வி.சண்முகம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தார். மேலும், கட்சியின் ஒற்றைத்தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தீர்மானங்கள் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியிருந்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினர்.
அதற்கு அடுத்த நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் சி.வி.சண்முகம் கூறும்போது, கட்சியின் விதிப்பதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. எனவே இனிமேல் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே இருப்பார் என்று அதிரடியாக கூறினார். இதனால் கட்சியில் மிகப்பெரிய குழுப்பமான சூழல் நிலவியது.
இந்நிலையில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா'வின் நிறுவனராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பெயர் மட்டுமே வெளிவந்துள்ளது. தற்போதைய நிலையில் ஒற்றைத்தலைமை சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Abp