ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை மாற்ற கூடாது.. முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.!
சென்னை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையை கிண்டி, கிங் வளாகத்திற்கு மாற்றுவதாக வெளியான செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் அதனை கைவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையை கிண்டி, கிங் வளாகத்திற்கு மாற்றுவதாக வெளியான செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் அதனை கைவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: நோய் இன்னதெனக் கண்டறிந்து, பின் அது உண்டான காரணத்தை அறிந்து, அதன் பின் அந்நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறையை கையாண்டு, நோய் நீங்க மருத்துவம் செய்ய வேண்டும் என்ற திருவள்ளூவரின் வாக்கிற்கிணங்க, அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை அடையும் வண்ணம், ஏராளமான சுகாதாரத் திட்டங்களை, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை தீட்டி, நடைமுறைப்படுத்தியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக ஏழை எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும் தரமான உயரிய சிகிச்சையை இலவசமாக பெறும் வண்ணம் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதியுடன் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை சென்னை மாநகரின் மையப்பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவாக்கியதோடு, அங்கு ஒரு மருத்துவக் கல்லூரியையும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஏற்படுத்தினார்கள்.
மாண்புமிகு அம்மா அவர்கள் 2011ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஓமந்தூராரில் அமைந்துள்ள கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் செயல்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதாலும், பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால் அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த கட்டடம் இல்லை என்பதாலும், இருவேறு கட்டடங்களில் இருந்து தலைமை செயலகம் செயல்பட முடியாது என்பதாலும், சட்டமன்றம் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து இயங்க வழிவகை செய்து விட்டு, அந்த இடத்தில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கினார்கள். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு.