அண்ணா பல்கலைக்கழக கட்டணங்களை உயர்த்திய தி.மு.க - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொத்து வரி குறித்தும், கல்விக் கட்டணம். குறித்தும், மதுவிலக்கு குறித்தும், நீட் தேர்வு குறித்தும், நகைக் கடன் குறித்தும், பயிர்களுக்கான இழப்பீடு குறித்தும், உரத் தட்டுப்பாடு குறித்தும், மின்சார கட்டணம் குறித்தும் நீட்டி முழக்கிய தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டதோடு மட்டுமல்லாமல், அதற்கு நேர்மாறான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை இதுதான் தி.மு.க. அரசின் சாதனை போலும்.
சென்ற ஆண்டு இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மை தன்மை சரிபார்ப்பு சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீதும், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணங்கள் மீதும், தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டணத்தின் மீதும், விடைத்தாளின் நகலினை பெறுவதற்கான கட்டணத்தின் மீதும் 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை அண்ணா பல்கலைக்கழகம் விதித்தது.
அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை திரும்பப் பெறுக! pic.twitter.com/G2LQ1BsbDK
— O Panneerselvam (@OfficeOfOPS) May 8, 2022
இந்த வரி விதிப்பு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாமல் அதன் இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் பொருந்தும். இதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் அறிக்கை வாயிலாக மாண்புமிகு. முதலமைச்சர் - அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதுவரை, நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.