இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு: ஓ.பன்னீர்செல்வம்.!
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடி நாயக்கனூர் எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடி நாயக்கனூர் எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனாவின் தாக்கம் கொடிகட்டிப் பறக்கின்ற நிலையில், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினைத் தொடர்ந்து, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கட்டுமானப் பொருட்களின் விலையும், விண்ணை முட்டும் அளவுக்கு தமிழகத்தில் உயர்ந்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருவதாகவும், ஊரடங்குக்கு முன் 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் விலை தற்போது 500 முதல் 520 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.
இதே போல் 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி விலை தற்போது 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 23,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 3,000 செங்கல் தற்போது 27,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 58,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் கம்பி தற்போது 72,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 3,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்போது 5,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஊரடங்கு நடைமுறையில் உள்ளதன் காரணமாக பெரிய கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ள நிலையில் கட்டுமானப் பொருட்களின் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.
ஆனாலும் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. ஒருவேளை ஊரடங்கு முடிந்த பிறகு கட்டுமானப் பொருட்கள் பதுக்கப்பட்டு, அதன் காரணமாக செயற்கையான விலையேற்றம் உருவாகி இருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இதன் காரணமாக கடன் வாங்கி சிறிய அளவில் புதிதாக வீடுகளை கட்டிக் கொண்டிருக்கின்ற வீடுகளை புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற வீடுகளை பழுது பார்த்துக் கொண்டிருக்கின்ற ஏழை, எளிய கிராமப்புற மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.