தென்னிந்தியாவை குறிவைக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா - கைப்பற்ற இவ்வளவு சாத்தியக்கூறுகளா?

Update: 2022-07-05 13:34 GMT

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதன்படி கடந்த 2014ம் ஆண்டில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் பா.ஜ.க. டெல்லிக்கு வெளியில் மிக முக்கியமான தேசிய கூட்டத்தை நடத்துவது இது 4வது முறையாகும். இதற்கு முன்னர் 2015ல் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும், 2016ல் கேரளாவிலும், 2017ல் ஒடிசாவிலும் நடத்தியது.

அதன்படி தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என்று பலரும் பங்கேற்றனர். முதல் நாள் நடைபெற்ற கூட்டத்தில் வறுமை ஒழிப்பு உட்பட பொருளாதாரம் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 2வது நாளில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை பதிவிட்டனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வாழ்நாள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது வரலாற்று சாதனை எனவும் கூறினார். அவர் ஜனாதிபதியாக தேர்வு செய்வது நாட்டிற்கே மிகப்பெரிய கவுரவமாக இருக்கும் என்றார். மேலும் அவர் பேசும்போது, நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரசியல் கட்சிகளைப் பார்த்து கேலி செய்யாமல் அவர்களின் தவறுகளைப் பார்த்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

மேலும், தெலங்கானாவில் பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும் பட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேலும் துரிதப்படுத்தப்படும் எனவும், தெலங்கானாவில் உள்ள விவசாயிகளுக்கு தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் தொலைவு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, நாட்டில் எதிர்க்கட்சிகளை மக்கள் மூலையில் அமர வைத்துள்ளனர். அடுத்து வருகின்ற 30 முதல் 40 ஆண்டுகள் வரையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியே நடைபெறும். சாதி அரசியல், வாரிசு அரசியல், வாக்கு வங்கி அரசுக்கு பா.ஜ.க. முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

தெலங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள குடும்ப ஆட்சிக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதுவது நிச்சயம். தமிழகம், கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும். வருகின்ற 40 ஆண்டுகாலம் பா.ஜ.க.வின் சகாப்தமாகவே இருக்கும். இந்தியா உலகளவில் தலைமை தாங்கி வருகின்ற நிலையில், தென்னிந்தியாவில் அனைவரிடத்திலும் நம்பிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் அடுத்த சுற்று வளர்ச்சி என்பது தென்னிந்தியாவில் இருந்து வரும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். வடமாநிலங்களில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க.வின் வியூகம் தென்னிந்தியாவில் சாத்தியமாகுமா? அதற்கான காரணிகள் உள்ளதா என்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. விரைவில் அதற்கான பணிகளிலும் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News