ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 2.0: கர்நாடகா எதிர்ப்பது சரியில்லை: அன்புமணி ராமதாஸ்!
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்குடன் செயல்படுத்தப்படவுள்ள இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதைக் கூட கர்நாடக அரசு எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் மிக மிக பின்தங்கிய மாவட்டங்களாக இருப்பவை தருமபுரியும், கிருஷ்ணகிரியும் தான். இந்த இரு மாவட்டங்களும் இணைந்து ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டமாக இருந்த போதே அங்கு நிலத்தடி நீரில் புளோரைடு அதிக அளவில் கலந்திருப்பதால் அங்குள்ள மக்களுக்கு பற்சிதைவு ஏற்பட்டு வந்தது. அதற்கு தீர்வு காணும் நோக்குடன், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு காவிரி நீரை சுத்திகரித்து வழங்குவதற்காக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தொடங்கப்பட்ட நாளில் இருந்தே வலியுறுத்தியும், போராடியும் வந்துள்ளது. அதன்பயனாக 1998-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, 2008-ஆம் ஆண்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2013-ஆம் ஆண்டில் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த போதிலும், தருமபுரி - கிருஷ்ணகிரி மக்களுக்கு இதுவரை முழுமையான அளவில் காவிரி நீரை வினியோகிக்க முடியவில்லை.
தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீரை வழங்குவதற்கு வசதியாக ஒகேனக்கல் திட்டத்தை விரிவாக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியதை ஏற்று, தருமபுரி மாவட்டத்திற்கான வளர்ச்சித்திட்டப் பணிகளை நேற்று முன்நாள் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.4,600 கோடியில் இரண்டாம் கட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அத்திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது, நிதியுதவி பெறுவது என்று கடந்து செல்ல வேண்டிய தொடக்கக்கட்ட பணிகள் ஏராளமாக உள்ளன. அதற்குள்ளாகவே அத்திட்டத்தை கர்நாடகம் எதிர்ப்பது, இச்சிக்கலில் அரசியல் லாபம் காணத் துடிப்பதையே காட்டுகிறது.