ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிக்கும் தி.மு.க. அரசு இதை செய்வது சாத்தியமில்லை - ராமதாஸ் காட்டம்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் வனப்பரப்பை அடுத்த பத்தாண்டுகளில் 33% ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த இலக்கை எட்டுவதற்கு அடிப்படைத் தேவையான வனத்துறை களப்பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எந்த முயற்சியையும் தமிழக வனத்துறை இதுவரை மேற்கொள்ளாதது தான் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தமிழ்நாட்டின் பங்களிப்பு சராசரியை விட அதிகமாகவே உள்ளது. ஆனால், வனப்பரப்பில் மட்டும் தமிழ்நாடு தேசிய சராசரியைக் கூட எட்ட முடியவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் தமிழகத்தின் பங்கு 3.96% ஆகும். இந்தியாவின் ஒட்டுமொத்த வனப்பரப்பிலும் தமிழகத்தின் பங்கு 3.96% என்ற அளவுக்கு பெருகினால் தான் சராசரியை எட்ட முடியும். ஆனால், இன்றைய நிலையில், இந்தியாவின் வனப்பரப்பில் தமிழகத்தின் பங்கு வெறும் 3% மட்டும் தான். அதேபோல், தேசிய வனக் கொள்கையின்படி ஒவ்வொரு மாநிலத்தின் மொத்தப்பரப்பளவில் 33% வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டின் வனப்பரப்பு அதன் நிலப்பரப்பில் 23.71% ஆக உள்ளது. ஆக, எந்த வகையில் பார்த்தாலும் தமிழக வனப்பரப்பு, இப்போது இருப்பதில் மூன்றில் ஒரு பங்குக்கும் கூடுதலாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தின் வனப்பரப்பு குறைவாக இருப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. தமிழ்நாடு கடந்த சில பத்தாண்டுகளில் அதிவேகமாக நகர்ப்புறமயமாகி வருவது தான் இதற்கு முக்கியக் காரணம் ஆகும். தேசிய வனக்கொள்கையின்படி தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை தமிழகத்தின் வனப்பரப்பு 0.06% மட்டுமே அதிகரித்திருக்கிறது. அண்டை மாநிலங்களான கேரளத்தின் வனப்பரப்பு 2.68%, ஆந்திரத்தின் வனப்பரப்பு 1.31% அளவுக்கு இதே காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் குறைவு.