பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு: தி.முக. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட ஓபிஎஸ் வலியுறுத்தல்!
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் திமுக அரசு முறைகேடுகள் செய்திருப்பதாகவும், உடனடியாக வெள்ளை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை. சுமார் 1250 கோடி ரூபாய் வீணாகிவிட்டது. சுருக்கமாகக் கூறினால், விழலுக்கு இறைத்த நீராகப் போய்விட்டது.
— O Panneerselvam (@OfficeOfOPS) January 21, 2022
பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். pic.twitter.com/CcCn1pAtg6
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1250 கோடி ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் திமுக அரசால் வழங்கப்பட்டன. பொங்கல் தொகுப்பில் இருந்த பெரும்பாலான மளிகைப் பொருட்கள் சாப்பிடுவதற்கே லாயக்கற்றது என்றும், இதில் உள்ள பொருட்களை சாப்பிட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. நானும் இது குறித்து விரிவாக அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இன்னும் சொல்லப்போனால், நடுநிலையாளர்கள் திமுகவிறகு ஆதரவாக பேசியவர்கள் கூட இந்த விஷயத்தில் திமுகவை விமர்சித்தனர்.
இந்தச் சூழ்நிலையில் இது குறித்து உணவுத்துறை அமைச்சர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதாக கூறியிருக்கிறார். அமைச்சர் அவர்களின் கூற்றுப்படி பார்த்தால், குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனம் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால், உடலுக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய பொருட்களை விநியோகம் செய்தால், கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது போல் உள்ளது. ஒரு நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை கொடுக்கப்படும் போது பொருட்களின் தரம், எடை ஆகியவை குறித்து அதற்கான ஒப்பந்தப் புள்ளியில் விரிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்தத் தரத்தையும், எடையையும் கொள்முதல் ஆணை பெற்ற நிறுவனங்கள் பின்பற்றியதா என்பதை திமுக அரசு சோதனை செய்யவில்லை என்பதும், இதற்குக் காரணம் சேர வேண்டியவர்களுக்கு சேர வேண்டியது சென்றுவிட்டது என்பதும்தான் பொதுமக்களின் குற்றச்சாட்டு.