தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் வருகிறது. இதற்காக கோடிகளில் பணத்தைக் கொட்டி கொடுத்து வடநாட்டு பிரசாந்த் கிஷோர் மேற்பார்வையில் வகுத்து வைத்திருந்த வியூகம் எல்லாம் தவிடு பொடியானதில் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் தளபதி. பன்னீர் செல்வம், எடப்பாடி எல்லாம் தமிழக முதலமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும்போது, எப்போதோ முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்க வேண்டிய ஸ்டாலினுக்கு இன்று வரையில் பழம் கனியாமலேயே உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாத இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி நமக்கு தான்.. இம்முறை முதலமைச்சராக நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று இதுநாள் வரையில் ஸ்டாலின் வகுத்து வைத்திருந்த வியூகம் எல்லாம் அதிமுக பிரச்சாரத்தில் தவிடு பொடியாகியுள்ளது. செல்லும் இடமெல்லாம் ஸ்டாலினுக்கு எதிராகவே களநிலவரம் இருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.
நடிகர் ரஜினியின் அரசியல் எண்ட்ரி அடிவயிற்றில் கலக்கத்தைக் கொடுத்திருந்த போது, உடல்நிலை மற்றும் கொரோனாவை காரணம் காட்டி, பின்வாங்கிய ரஜினியின் முடிவுக்குப் பின்னால் அண்ணாத்தே படத் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவழியாய் ரஜினி தற்போது அரசியலுக்கு வரவில்லை என்று கூறியது நிம்மதியைக் கொடுத்தாலும் இப்போது அழகிரியின் அரசியல் அதகளம் தூக்கத்தைக் கெடுத்துள்ளதாம்.
இன்னொரு பக்கம் திமுகவினரின் தகிடுதனங்களை வெளுப்பதையே கொள்கையாக கொண்டுள்ளார் நடிகர் கமல். இதுவரை ஆட்சி செய்து வந்த திமுகவும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்கிற கமலின் பிரச்சாரம் மக்களிடையே திமுகவுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இவை நடிகர் கமலுக்கு வாக்குகளாக மாற வாய்ப்பில்லை என்றாலும் திமுக மீது அதிருப்தியை அதிகரிக்கவே செய்துள்ளது. இந்த திரிசங்கு நிலையை கூட்டணியில் இருக்கும் கட்சியினர் நன்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இப்போது குழப்ப நிலையில் இருக்கும் ஸ்டாலினிடம் கூட்டணி, இடப்பங்கீடு, எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்று திருமாவளவன் மற்றும் வைகோ உள்ளிட்டவர்கள் முரண்டு பிடித்து வருகிறார்கள். டெல்லியில் அமர்ந்தபடியே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வகுத்து வரும் வியூகம் ஸ்டாலினை நிலைகுலையச் செய்துள்ளது.
சரியான எதிர்கட்சியாக இதுநாள் வரையில் செயல்படாதது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் களத்தில் இறங்கி, அதிமுக மீது குறை சொல்வது நிச்சயமாக வாக்குகளாக மாறாது என்கிறார்கள். இது போதா குறையாக உட்கட்சியிலேயே சீனியர் தலைவர்கள் முரண்டு பிடித்து வருகிறார்களாம். இந்த இழுபறி பேரங்கள் எல்லாம் வேண்டாம். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே அனைத்து தொகுதியிலும் போட்டியிடலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொம்பு சீவி வருகிறார்.
துரைமுருகன் யோசனைக்கு எதிர்புறமாக உள்ளது டி.ஆர். பாலுவின் யோசனை. போன தேர்தல் மாதிரி பேராசைப் பட்டு வர்ற வாய்ப்பை இழந்திடாதீங்க.. கூட குறையாக இருந்தாலும் பரவாயில்லை. முரண்டு பிடிக்காம பக்குவமாக காரியத்தை சாதிக்கப் பாருங்க.. எல்லாரையும் அரவணைச்சு போவதுதான் தற்போதைக்கு நல்லது. இல்லை என்றால் வைகோ திடீரென்று மக்கள் நல கூட்டணின்னு தனியே கிளம்பி போய் வாக்குகளை பிரிக்கிற வேலையைப் பார்த்துடுவாரு என்று எச்சரித்து வருகிறாராம்.
இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் உதயநிதி பிரச்சாரத்திற்கு செல்லுகின்ற இடங்களில் எல்லாம் புற்றீசல் போல கட்சிக்குள்ளேயே பிரச்சனைகள் கிளம்பி வருவது புது தலைவலியை ஸ்டாலினுக்கு ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி தூத்துக்குடி, திருநெல்வேலி என்று சுற்றுப்பயணம் சென்றதும், உதயநிதியின் பார்வையும் அந்த மாவட்டங்களின் மீது உள்ளது ஸ்டாலினே ரசிக்கவில்லை என கூறப்படுகிறது.
இவங்க குடும்ப பஞ்சாயத்து அடுத்த தேர்தல் நடந்தாலும் முடியாது.. நாம ஜெயிக்கிற வழியைப் பார்ப்போம் என்று தெம்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜய பாஸ்கர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி என்று தேர்தல் வேலைகளில் சுழன்றடித்து கொண்டு சென்று கொண்டிருக்கிறது அதிமுக தரப்பு. அதிமுக தரப்புக்கு தற்போதைக்கு தலைவலியாய் உள்ளது ஓ.பி.எஸ்ஸின் போக்கு தான் என்று எதிர்கட்சியினர் கணித்திருந்த அரசியல் ஆரூடங்களை எல்லாத்தையும் எடப்பாடியுடன் ஒரே காரில் பிரச்சாரத்திற்கு சென்று தவிடு பொடியாக்கி விட்டார்.
இந்நிலையில், இந்த தேர்தலும் ஸ்டாலினுக்கு காலை வாரி விடும் தேர்தலாகவே இருக்கும் என்று கணித்து சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தற்போதைய நிலவரப்படி ஸ்டாலினுக்கு முதலமைச்சராக வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சொல்லப்படுகிறது.