பி.கே'வை வைத்து திட்டமிடும் வரலாற்று சிறப்புமிக்க காங்கிரஸ் - கடைசி ஆயுதமா?

Update: 2022-04-18 11:19 GMT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங், ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, அஜய் மக்கான் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நீடித்த கூட்டத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றார். 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், 2024ஆம் ஆண்டு தேர்தல் வியூகம் குறித்த விரிவான விளக்க அறிக்கையை காங்கிரஸ் தலைவரிடம் பிரசாந்த் கிஷோர் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், பிரசாந்த் கிஷோர் முன்வைத்த செயல்திட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் அமைக்கப்படும் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின்னரே கட்சியின் தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு வெறுமனே தேர்தல் ஆலோசகராக இல்லாமல், கட்சியிலேயே சேர்ந்துவிடுமாறு பிரசாந்த் கிஷோரை சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

கூடவே, கட்சிக்குள் மாற்றங்களை கொண்டு வரா தனக்கு முழு சுதந்திரத்தையும் கேட்கிறார் பிரசாந்த் கிஷோர். இதை சோனியா குடும்பமும் மூத்த தலைவர்களும் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப் பொறுத்தே அவரது காங்கிரஸ் என்ட்ரி அமையும். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகவ் சதா, காங்கிரஸ் கட்சி இறந்த குதிரை போன்றது. இறந்த குதிரைக்கு கசையடி கொடுப்பதில் அர்த்தமில்லை என சோனியாகாந்தி உடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

Similar News