நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரதமர் சர்மா ஓலி! இந்திய-நேபாள உறவுகள் நிலை என்ன?

நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரதமர் சர்மா ஓலி! இந்திய-நேபாள உறவுகள் நிலை என்ன?

Update: 2021-01-26 07:00 GMT

நேபாளத்தில் நடந்து வரும் அரசியலமைப்பு நெருக்கடி ஞாயிற்றுக்கிழமை அன்று அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை தலைமை ஏற்று நடத்தும் புஷ்ப கமல் பிரசந்தா மற்றும் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் ஆகியோர் நேபாளத்தின் இடைக்கால பிரதமர் கேபி ஷர்மா ஓலியை தங்கள் கட்சியில் இருந்து நீக்கினார்கள். 

புஷ்ப கமல் பிரசந்தா

இப்படி வெளியேற்றுவது கட்சியை ஒரேயடியாக இரண்டாக பிளவுபடுத்தியது. தற்பொழுது இரண்டு பிரிவுகளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வமான சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக மோதிக் கொண்டுள்ளனர். நேபாள தேர்தல் ஆணையம் இந்த இரு பிரிவுகளையும் அதிகாரப்பூர்வ கட்சியாக அங்கீகரிக்க மறுத்து விட்டது. அந்நாட்டின் பாராளுமன்ற கீழ் சபையை பிரதமர் ஓலி கலைத்த ஒரு மாதத்திற்கு பிறகு கட்சியிலிருந்து அவரின் வெளியேற்றம் நிகழ்கிறது.

 பாராளுமன்றத்தை கலைத்ததை மாதவ் குமார் நேபாள் மற்றும் பிரச்சந்தா ஆகியோர் ஏற்கனவே கடுமையாக எதிர்த்தனர். பிரதமர் ஓலி ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார். தற்போது நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு எந்தக் கட்சியும் இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது. 

ஷர்மா ஓலி

 அங்கே தேர்தல் நடக்கும் வாய்ப்புகள் அந்நாட்டு தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முடிவை பொறுத்தது. தற்போதைக்கு கீழ் சபையை கலைத்ததற்கு எதிரான பல மனுக்களை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

 எதிரெதிர் அணியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 2018இல் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. பாராளுமன்ற சபையில் 275 இடங்களில் 175 இடங்களை கைப்பற்றியது .ஆனால் சில நாட்களிலேயே கட்சிக்கு உள்ளேயே பிரதமர் ஓலிக்கும் பிரச்சந்தாவிற்கும் இடையே பிரதமர் பதவியை வகிப்பது குறித்து உட்கட்சிப் பூசல்கள் அதிகமாயின.

 2.5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி அதிகாரத்தை வகிக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தற்பொழுது பெரும் அரசியலமைப்பு நெருக்கடி ஆக வெடித்துள்ளது.

 இரண்டு கட்சிகளும் இணைந்த சமயத்தில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்குமிடையே உறவுகள் மோசமடைந்து வந்தன. அங்கே ஏற்கனவே துவண்டு போயிருந்த பொருளாதாரத்தை மேலும் நசிப்பதற்காக, இந்தியா பொருளாதார தடைகளை விதித்து அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறையை ஏற்படுத்தியதாக நேபாளம் குற்றம்சாட்டியது. 

நேபாளம் இந்தியாவிற்கு எதிராக கொண்ட மனக்கசப்பை சீனா உபயோகப் படுத்திக் கொண்டது. நேபாளத்தின் அதிகார மையங்களில் தனது செல்வாக்கை அதிகரிக்க தொடங்கியது. 2020ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இடையிலான உறவுகள் ஒரு புதிய கீழ் நிலையை தொட்டன. இந்தியாவின் பகுதிகளாக அறியப்படும் சிலவற்றை தங்கள் வரைபடத்தில் சேர்த்து நேபாள சட்டமன்றத்தில் ஒரு புதிய திருத்தம் உருவாக்கப்பட்டது.

 ஆனால் சமீபத்தில் கீழ் சபையை கலைத்ததிலிருந்து இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவுகளை சரி செய்ய பிரதமர் ஓலி முன்வந்தார். ஜனவரி மாத ஆரம்பத்தில் இந்தியாவின் உண்மையான நண்பனாக இருக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

 இந்தியா உள்நாட்டில் இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கி அதற்கு பிறகு தடுப்பூசி மைத்திரி முயற்சியின் மூலம் பல நட்பு நாடுகளுக்கு உதவி செய்து வருகிறது. நேபாளம் இந்தியாவிற்கு அண்டை நாடு என்ற பட்சத்தில் அந்நாட்டை முதன்மைப்படுத்துவதாக உறுதி அளித்திருந்தது.அதை நிறைவேற்றும் விதத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒரு மில்லியன் டோஸ்கள் நேபாளத்திற்கு சென்று சேர்ந்தது.

 நேபாளத்தில் சுகாதார அமைச்சர் பிரதேஷ் திருப்பதி இன்னும் 4 மில்லியன் டோஸ்கள் வாங்குவதற்கான தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

பிரதமர் ஓலி, இந்திய-நேபாள உறவுகளை குலைத்தார் என்றாலும், 2008 முதல் 2009 இல் தான் பதவியில் இருந்த பொழுது தற்பொழுது கிளர்ச்சி தலைவராக இருக்கும் பிரச்சந்தா, சீனாவுடன் நெருக்கமான உறவுகளை கையாண்டார். இதை இந்தியா கவனத்தில் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News