புதுச்சேரி அரசு வழங்கியதை போன்று தமிழகத்திலும் மழை நிவாரணம் ரூ.5000 வழங்கிடு! ராமதாஸ் வலியுறுத்தல்!
புதுச்சேரி மாநில அரசு ரூ.5,000 வழங்கியதை போன்று தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநில அரசு ரூ.5,000 வழங்கியதை போன்று தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த ஆண்டுகளைப் போலவே இப்போதும் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த கடலூர் மாவட்டத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. மற்றொருபுறம் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மழை - வெள்ள நீர் இன்னும் வடியாத பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேடுகளின் விளைவாக நோய் பரவுவதற்கான ஆபத்தும் அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மையான மாவட்டங்களின் வடிகாலாக கடலூர் மாவட்டம் தான் திகழ்கிறது. தென்பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் கடலூர் மாவட்டத்தில் தான் கடலில் கலக்கின்றன. இம்மாதத் தொடக்கத்தில் பெய்த தொடர்மழையால் தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீரே முழுமையாக வடியாத நிலையில், கடந்த 5 நாட்களில் விட்டு விட்டு பெய்த மழையும், ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளமும் மாவட்டத்தின் பல பகுதிகளை வெள்ளக்காடாக்கி விட்டன.
கடலூரில் கடந்த 18-ஆம் தேதி 150 மி.மீ மழை கொட்டியது. அதைத் தொடர்ந்து 19-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி, கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடி உட்பட கடலூர் மாவட்ட ஆறுகளில் மட்டும் வினாடிக்கு 4 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் பண்ருட்டி முதல் கடலூர் வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இந்தப் பகுதிகளை விட கடலூர் நகரமும், அதை ஒட்டிய பகுதிகளும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தவிர இன்னும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தாலும் கூட கிராமங்களை விட்டு வெளியேறவில்லை.