மீண்டும் ரஜினி ‘வாய்ஸ்’ அரசியலில் ஈடுபடுவார்.. மூத்த பத்திரிகையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி.!

மீண்டும் ரஜினி ‘வாய்ஸ்’ அரசியலில் ஈடுபடுவார்.. மூத்த பத்திரிகையாளர் ஆடிட்டர் குருமூர்த்தி.!

Update: 2020-12-29 13:27 GMT

அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், 1996ம் ஆண்டு செய்ததுபோலவே தமிழகத்தில் வாய்ஸ் அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுவார் என்று மூத்த பத்திரிகையாளரான ஆடிட்டர் குருமூர்த்தி கணித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக எடுத்த முடிவு குறித்து என்னிடம் தெரிவித்திருந்தார். இது தவிர்க்க முடியாத முடிவு.

ரஜினியின் அறிக்கையை கூர்ந்து கவனியுங்கள். தேர்தல் அரசியலுக்கு வராமல், தமிழக மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னுடைய கணிப்பு இது தான்: தமிழகத்தில் 1996ம் ஆண்டு செய்தது போன்றே ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் நடிகர் ரஜினிகாந்த் 1996ம் ஆண்டு முதன் முதலாக குரல் கொடுத்தார். அன்று ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கு எதிராக தனது குரலை பதிவு செய்தார். அப்போது, திமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.

இந்த கூட்டணிக்கு ரஜினிகாந்த் தன் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தார். அப்போது திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது ரஜினியின் குரலுக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாகவும் பார்க்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
 

Similar News