திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சரின் நண்பர் வீட்டில் அள்ள, அள்ள குறையாமல் வந்த 2000 ரூபாய் நோட்டுக்கள்
மேற்கு வங்கம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் மிக நெருங்கிய நண்பரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் ஏற்கனவே பள்ளி சர்வீஸ் ஆணையம் ஆட்சேர்ப்பில் ஊழல் செய்துள்ளதாக புகார்கள் உள்ளது. அதனடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடியான சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அதில் திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய நண்பராக உள்ளவர் அர்பிதா முகர்ஜி. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டான பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதில் மொத்தமாக ரூ.20 கோடி பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்துமே ரூ.500, ரூ.2000 நோட்டுகளாகவே இருந்துள்ளது. இது பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பணத்தை எண்ணுவதற்காக இயந்திரத்தையும் அமலாக்கத்துறை சார்பில் வங்கியிடம் கேட்கப்பட்டுள்ளது என கூறினர். மேற்கு வங்க அமைச்சருக்கு நெருங்கிய நண்பர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Source, Image Courtesy: One India Tamil