இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சசிகலா.. உற்சாகத்தில் உறவினர்கள்.!

இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சசிகலா.. உற்சாகத்தில் உறவினர்கள்.!

Update: 2021-01-31 10:32 GMT

கொரோனா தொற்று மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனி நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு சசிகலா, இளவரசி மற்றும் திவாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து 3 பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலமும் முடிவுற்றது.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனையடுத்து அவருக்கு முதற்கட்டமாக பெங்களூருவில் உள்ள சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து நுரையீரல் தொற்று காரணமாக சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதன் பின்னர் அவருக்கு சி.டி.ஸ்கேன் மேற்கொண்டதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து அவருக்கு அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் அவ்வப்போது தகவலை வெளியிட்டனர். அதன்படி தற்போது பூரணகுணமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாகவும், சசிகலாவின் உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை இயல்பான அளவிலேயே உள்ளதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்ப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில நாட்கள் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சசிகலா குணமடைந்ததால் அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் அவர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

Similar News