சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்.. விக்டோரியா மருத்துவமனை தகவல்.!

சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்.. விக்டோரியா மருத்துவமனை தகவல்.!

Update: 2021-01-24 12:51 GMT

சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் வருகின்ற ஜன., 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே அவருக்கு திடீரென்று மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூரில் உள்ள சிவாஜிநகரில் அமைந்துள்ள பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் செய்வதற்காக மாற்றப்பட்டார். இதன் பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது வீல் சேரில் அழைத்து செல்லப்பட்டார். இதனால் அவருடைய உடல்நிலை மோசமாக உள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொற்று அறிகுறிகள் குறைய தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. உணவுகளை சாப்பிட்டு வருகிறார். தற்போது அவர் செவிலியர்கள் உதவியுடன் எழுந்து நடக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
 

Similar News