மத்திய அரசுதான் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்தது - சட்டப்பேரவையில் ஜகா வாங்கிய சேகர்பாபு
ஊரெல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ள தி.மு.க அரசு விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் தடை விதித்துள்ளது விசித்திரமாக உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா'விற்கு தி.மு.க தடை விதித்துள்ளதற்கு மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க தப்பிக்க பார்க்கிறது.
இன்றைய சட்டசபை விவாத நேரத்தின் போது நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, "விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும்", என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "மத்திய அரசு உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கொரோனா மூன்றாம் நிலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்த தடை விதிக்க வலியுறுத்தி இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தடை விதித்திருக்கிறது" என குறிப்பிட்டு பேசினார்.
தமிழகத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் விநாயகர் சதுர்த்திக்கு தி.மு.க அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழக பா.ஜ.க இந்துக்களின் சார்பாக விநாயகர் சதுர்த்தியை நடத்த தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையை உணர்ந்த தி.மு.க தடையை மத்திய அரசு கூறியதால்'தான் விதித்துள்ளோம் என இன்று சட்டப்பேரவையில் அறிக்கை விடுத்துள்ளது. கொரோனோ காலத்தில் கூட்டம் கூட அனுமதிக்க கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் அதை பொருட்படுத்தாது ஊரெல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ள தி.மு.க அரசு விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் தடை விதித்துள்ளது விசித்திரமாக உள்ளது.