டிரம்பிற்கு ஏற்பட்ட நிலைமை.. இந்திய அரசியல் தலைவர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு.. பா.ஜ.க., எம்.பி., எச்சரிக்கை.!
டிரம்பிற்கு ஏற்பட்ட நிலைமை.. இந்திய அரசியல் தலைவர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு.. பா.ஜ.க., எம்.பி., எச்சரிக்கை.!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் அதிரடியாக முடக்கிய சம்பவம் ஒட்டு மொத்த உலக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். தற்போது அதிபராக இருக்கும் டிரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார். அதே போன்று அமெரிக்கா நாடாளுமன்றத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது போராட்டத்தை நிறுத்த முயற்சி செய்யாமல் அவர்களை தூண்டிவிடும் நோக்கத்தில் டிரம்ப் ட்விட்டரில் வீடியோ மற்றும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அவருடைய ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக அந்நிறுவனம் முடக்கியது. இதனால் விரக்தியடைந்த டிரம்ப் ட்விட்டர் தளத்திற்கு மாற்றாக வேறு தளம் உருவாக்க வேண்டும் என அவருடைய ஆதரவாளர்களிடையே கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ள செய்கை, ஜனநாயக நாடுகளுக்கு இது போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படுகின்ற அச்சுறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
அமெரிக்க அதிபருக்கு இது நடக்கும் என்றால், நாளை இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே மத்திய அரசு விரைவாக இது போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை சீராய்வு செய்வது நமது நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகவும் நல்லது. இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.