பூஜையை தடுத்து மனதை புண்படுத்திவிட்டார் - எம்.பி.செந்தில்குமார் மீது புகார் அளித்த பிராமண சமாஜ சங்கம்
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏரி தூர்வாருவதற்காக முன்பாக நடைபெற இருந்த பூமி பூஜை விழாவை தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் தடுத்து பூசாரியை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்ட செயலுக்கு தமிழ்நாடு பிராமன சமாஜ சங்கம் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு பிராமண சமாஜ சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில தலைவர் அரிஹர முத்து ஐயர் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் பற்றி உரையாற்றினார். அதன்படி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த சங்கத்தின் மாநில தலைவர் அரிஹர முத்து ஐயர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சனாதன தர்மத்தை தொடர்ந்து பின்பற்றி அதற்கான வழியில் செயல்படுவோம். சனாதான தர்மத்திற்கு எந்தவிதமான தடையும, இடையூறும் ஏற்படாத வகையில் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவை கேட்போம். மேலும், மத்திய அரசு வழங்கிய பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து முற்பட்ட சமூகத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். தற்போது உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.
மேலும், பூமி பூஜை விழாவில் மிகவும் அநாகரிகமான முறையில் பேசி ஆன்மீகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் தருமபுரி தி.மு.க., எம்.பி., செந்தில்குமாரை சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் எம்.பி., மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: One India Tamil