பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது - ஆளுநர் தமிழிசை !
"பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை கூறியதாவது, "பாரதியாரின் புகழைப் பாடும் அளவுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் மாளிகையிலும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், "தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று சொன்னார் பாரதி. அப்படி ஒரு பசுமையான புதுச்சேரியை, பசி இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார். பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த 10 ஆண்டுகளில் ஒரு வளர்ச்சியடைந்த புதுச்சேரியை உருவாக்க கனவு கண்டார். அத்தகைய புதுச்சேரியை உருவாக்க பாரதியின் பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்க வேண்டும்" எனவும் கூறினார்.
பின்னர் பேசிய அவர், "பாரதிக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்று முதல்வருடன் ஆலோசனை செய்து இதற்காகக் குழு அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.