சூடுபிடிக்கும் தமிழக அரசியல்! அடுத்தடுத்து ஆளுநருக்கு பறக்கும் ரிப்போர்ட்! தி.மு.க-வின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் டெல்லி வட்டாரம்!
தி.மு.க-வின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் டெல்லி வட்டாரம்!
சமீபத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு நலத்திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் இறையன்புவிடம், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ரிப்போர்ட் கேட்டுள்ளதாக முன்னணி ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரத்யேக செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அனுப்பிய கடிதத்தில், ஒவ்வொரு துறையிலும் உள்ள உயர் அதிகாரிகள், துறை தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் அவர்களின் துறை குறித்த ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், ஆளுநர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையும் எப்படி இயங்குகிறது, நலத்திட்டங்கள் என்ன நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார். இதனால் உங்கள் துறை குறித்த விவரங்களை முழுமையாக வெளியிடுங்கள். உங்கள் ரிப்போர்ட் விளக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே, ஆளுநர் ரிப்போர்ட் கேட்டதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிக்கையில், அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.
திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் திமுகவின் செயல்பாடுகளை டெல்லி வட்டாரம் உன்னிப்பாக கவனித்து வருவதால், எடக்கு மடக்காக எது செய்தாலும், உடனே அப்டேட் சென்றுவிடும்.