"கோவில்களை திறப்பதில் தமிழக அரசே முடிவு எடுக்கலாம்" - நீதிமன்றம் தீர்ப்பு !
"விஜயதசமி அன்று கோவில்களை திறப்பதில் தமிழக அரசே முடிவு எடுக்கலாம்" என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க'வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வருகிற 15'ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களைத் திறக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை பீளமேட்டை சேர்ந்த சேர்ந்த ஆர். பொன்னுசாமி கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமெனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15-ம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தினம் கோவில்களைத் திறக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜயதசமி அன்று கோவில்களை திறப்பதில் தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.