இறப்புவரை அரசியல் இல்லை என கூறிய தமிழருவி மணியன்.. நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட காந்திய மக்கள் இயக்கம்.!

இறப்புவரை அரசியல் இல்லை என கூறிய தமிழருவி மணியன்.. நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட காந்திய மக்கள் இயக்கம்.!

Update: 2021-01-11 11:25 GMT

காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள்  மன்றத்துடன் இணைவதாக தகவல்கள்  வெளியான நிலையில் இது பற்றி காந்திய மக்கள் இயக்கம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை எப்படியும் சம்மதிக்க வைத்து கட்சியை தொடங்கிவிட வேண்டும் என்று, ரஜினியை விட அதிக ஆர்வத்தில் இருந்தவர் தமிழருவி மணியன்தான். ரஜினியே கட்சிப்பற்றி பேசாமல் இருந்தாலும், அவரை தொடர்ந்து உசுப்பேத்தி கொண்டே இருந்தார். அடுத்த தமிழகத்தின் முதலமைச்சர் நீங்கதான் எனவும் கூறியிருந்தார். அவ்வப்போது சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று வந்து ஆலோசனைகளும் நடத்தி வருவார். அதனை ஊடகங்களுக்கும் தகவல்களை வெளியிடுவார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலையை காரணம் காட்டி கட்சியை தொடங்கவில்லை என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு ரஜினி மக்கள் மன்றத்தினரை விட தமிழருவி மணியனுக்கு மிகுந்த மனக்கவலையை அளித்தது. இதனையடுத்து ஒரு பேட்டி ஒன்று அளித்தார். அதில் நான் இனிமேல் இந்த அரசியலில் தொடர விரும்பம் இல்லை. நிரந்தரமாக விலகுகிறேன் என்று செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்து சென்றார்.

ஆனாலும் ரஜினியின் ரசிகர்கள் சும்மாவிட வில்லை. நேற்று (10ம் தேதி) சென்னை வள்ளூவர் கோட்டத்தில் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்படி ஒரு போராட்டம் வள்ளூவர் கோட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே கோவையில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது. அதில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியனை தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களை அடுத்த ஆறு மாதத்திற்குள் 10 லட்சமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளனர். இப்படிப்பட்ட சமயத்தில்தான் சந்தேகங்கள் எழுகிறது. ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கம் இணைக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் நேற்று முழுவதும் கசிய ஆரம்பித்தது.

ரஜினி கட்சி ஆரம்பிக்காத பட்சத்தில், இது எப்படி சாத்தியம்? இதனால் என்ன நன்மை என்று பல சந்தேகங்கள் எழுந்து வந்தது.. ஆனால் தற்போது இந்த தகவலுக்கு காந்திய மக்கள் இயக்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் பா.குமரய்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சில செய்திகள் காட்சி ஊடகங்கங்கள் காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக செய்தி வருவது கற்பனையானது. காந்திய இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு சகோதர பாவத்துடன் நீடிக்கும் என்றார்.

இந்த குழப்பம் மீண்டும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.. எதற்காக ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்திய அதே நாளில் இந்த கூட்டமும் நடந்தது என்று தெரியவில்லை.. அதேபோன்று இதே தமிழருவி மணியன்தான், இனி இறக்கும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று சொன்னார்.. அப்படி சொன்னவர், திரும்பவும் தனது இயக்கப் பணிகளை தொடங்கியிருப்பது ஏன்? இதற்கு என்ன காரணமாக இருக்கும்? என்ற பல குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வேளை மீண்டும் தமிழருவி மணியன் நடிகர் ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைப்பாரா அல்லது தனது காந்திய மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பாரா என அரசியல் விமர்சர்கள் மத்தியில கேள்வி எழுந்துள்ளது.

Similar News