உண்மைக்கு புறம்பாக பேசாமல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் - தங்கர்பச்சான் !

Breaking News.

Update: 2021-09-09 10:45 GMT

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என தங்கர் பச்சான் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இயக்குனர் தங்கர் பச்சான் தனது வீட்டுக்கு மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது என அறிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த அறிக்கை தொடர்பாக தங்கர் பச்சானுக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறாக பேசினார்.

இதனையடுத்து நேற்று தங்கர்பச்சான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்து விட்டதாகவும், நான் அதற்குப்பின் மன்னிப்பு கோரியதாகவும் இரண்டாவது முறையாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ஒன்றுக்கு சட்ட மன்றத்தில் பதில் அளித்துள்ளார். உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டசபையில் பதிவு செய்ததுடன் ஒரு மாதத்திற்கு முன் முதல்வருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க மறுக்கின்றார்.

எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்க்கக்கோரி அல்ல. மாதாந்திர மின் கட்டண முறையை செயல்படுத்தாததினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான். முதல்வர் இது குறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின் போதும் திமுக தேர்தல் அறிக்கையிலும் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கின்றேன்.

இது என்னுடைய வீட்டின் பிரச்னை மட்டுமல்ல; தமிழகத்திலுள்ள அனைவரின் பிரச்னை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். இப்பொழுதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கையை உணர்ந்து முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்வார் என நம்புகின்றேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

Twitter

Tags:    

Similar News