திமுகவினர் 2 மணிக்கு மேல் தங்களின் கச்சேரியை ஆரம்பிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கச்சேரியை தொடங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருப்பதாக தங்களுக்கு தகவல் வந்து கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முகவர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், குண்டர்கள், ரவுடிகள் முழுமையான அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் களம் இறக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று (பிப்ரவரி 18) மனு கொடுத்துள்ளோம். அதனை பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால் எங்களுக்கு கிடைத்த தகவல்படி திமுகவை பொறுத்தமட்டில் இனிமேல்தான் கச்சேரியை தொடங்குவதாக கூறியுள்ளனர். எனவே 2 மணிக்கு மேல் அந்த கச்சேரியை அனைவரும் காண்பீர்கள் என நினைக்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்துள்ளனர். எனவே இதனை ஆரம்பித்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Hindu Tamil