தமிழகத்தில் 5,454 கோவில் எங்கே? அமைச்சர் சேகர்பாபுவுக்கு தெரியுமா,தெரியாதா ? ஹெச்.ராஜா கடும் விமர்சனம்!
தமிழகத்தில் அறநிலையத்துறை தனது வரம்புமீறி செயல்பட்டு வருகிறது. கோவில்களை அறநிலையத்துறை அரசு எடுத்துக்கொள்வதை நிறுத்தாவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளரும் தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
அறநிலையத்துறை வரம்பு மீறி செயல்பட்டு வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஹெச்.ராஜா பங்கேற்று வழிப்பட்டார். இதனையடுத்து அங்கு இருந்த செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: கோவில் அபகரிப்பில் திமுக அரசு சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறது. ஆட்சி க்கு வந்த சில மாதங்களிலேயே பல்வேறு கோவில்களை அரசு எடுத்துக்கொண்டது.
அறநிலையத்துறை சட்டத்தின் படி செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஒரு கோவிலில் நிர்வாகம் சரியாக இல்லையெனில் அதனை மீண்டும் 5 ஆண்டுகளுக்குள் சரிசெய்து பழைய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அதனை விட்டு கடந்த 70 ஆண்டுகளாக கோவிலை அபகரிப்பது மட்டுமின்றி நகைகளையும் கபளிகரம் செய்கின்றனர் என்றார்.
மேலும், அறநிலையத்துறையின் கீழ் எத்தனை கோவில்கள் தமிழகத்தில் உள்ளது என்று தெரியாத நிலையில் சேகர்பாபு இருக்கிறார். நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வழக்கறிஞர் கார்த்திகேயன் 44,121 கோவில்கள் இருப்பதாக தகவல் கூறினார். ஆனால் சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு 38,667 கோவில்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்படி பார்த்தால் மீதி 5,454 கோவில் எங்கே. தன்னுடைய துறை பற்றிய ஞானம் இல்லாமல் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Asianet News