'ஆதினத்தை தொட்டவன் அன்றே தொலைந்தான்' - அண்ணாமலை!

Update: 2022-06-11 12:30 GMT

ஆதினத்தை தொட்டவன் அன்றே தொலைந்தான் என்று சூளகிரியில் பா.ஜ.க. 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக தலைவர் அண்ணாலை கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூளகிரியில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன், கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் அமைந்து 8 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதுவரையில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட சொல்ல முடியாது. பிரதமர் மோடி பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை துவக்கியுள்ளார். இலவச காஸ்இணைப்பு மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு முத்ரா கடன் உதவித்திட்டம் இது போன்று எண்ணற்ற திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

மேலும், கடந்த 2014க்கு முன்னர் இந்தியப் பொருட்களை வாங்க வேண்டாம் அதன் தரம் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தற்போது அப்படியான நிலை இல்லை. உலகம் முழுவதும் இருக்கும் இரு சக்கர வாகனத்தில் 15 சதவீதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டதாக உள்ளது. அதுதான் சுயச்சார்பு இயக்கம் என்றார். கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்குச் எவ்வித சலிப்பு ஏற்படவில்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு ஆண்டு ஆட்சியில் எப்பொழுது தேர்தல் வரும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார்.

தற்போது தமிழகத்தில் லஞ்சம், லாவண்யம் இல்லாத தினம் உண்டா என்ற கேள்வி எழுப்பிய அவர், கண்ணுக்குத் தெரியாதவைகளிலும் ஊழல் செய்கின்றனர் என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் வடபழனி முருகன் கோயிலில் 5.5 ஏக்கர் நிலத்தை மீட்டுவிட்டதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.க.தான் அந்த நிலத்தை குத்தகைக்கு விட்டது என்பதை ஏன் சொல்ல மறுக்கின்றனர் என்ற கேள்வியையும் எழுப்பினார். அதே நேரத்தில் ஆதீனத்தை தொட்டவன் அன்றே தொலைந்தான் எனவும் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: News 7 Tamil

Tags:    

Similar News