இரட்டை இலக்கத்தில் பா.ஜ.கவின் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றம் செல்வார்கள் - அடித்து கூறும் வானதி ஸ்ரீனிவாசன்.!

#vanathisrinivasan #tnbjp

Update: 2020-12-16 07:00 GMT

இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க'வின் எம்.எல்.ஏ'க்கள் சட்டமன்றத்திற்குள் செல்வார்கள் என பா.ஜ.க'வின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் அடித்து கூறியுள்ளார்.

தனியார் ஊடக இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "பா.ஜ.க'வில் மகளிர் அணித் தலைவர் என்கிற பொறுப்பு இத்தனை வருடக் காலத்தில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை தேசிய அரசியலில் இல்லாத நான், இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது வட இந்தியாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும், அதேசமயம் நல்ல வரவேற்பையும் கொடுத்துள்ளது.

ஏனென்றால் தென்னிந்தியாவில் அடுத்து வரும் காலங்களில் கட்சி வளர்ச்சிக்கு இது துணையாக இருக்கும் என்று நம்புகிறார்கள். எனக்குமே இது மிகப்பெரிய பொறுப்பு. நல்லபடியாகச் செய்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி இருக்கிறது" என தனக்கு பா.ஜ.க அளித்துள்ள பதவியை பற்றி பெருமைபட கூறினார்.

மேலும் தமிழக பா.ஜ.க'வின் தேர்தல் கள செயல்பாடுகளை பற்றி பதிலளிக்கையில் அவர் கூறியதாவது, "ஏற்கனவே  நாங்கள் களத்தில் இருக்கிறோம். தேர்தல் களம் என்பது பா.ஜ.க'வுக்கு புதிதாக ஆரம்பிக்கக்கூடிய ஒன்று அல்ல.

வருடத்தின் 365 நாட்களும் பா.ஜ.க மக்கள் பணியில், அரசியல் பணியில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது. வரக்கூடிய காலங்களில் எங்கள் பணிகள், அதனுடைய வேகம், வீச்சு அதிகமாக இருக்கும். சமீபத்தில்தான் வெற்றிகரமாக வெற்றிவேல் யாத்திரையை முடித்திருக்கிறோம். இதன் மூலமாக மாவட்டந்தோறும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த யாத்திரையில் பங்குகொண்டிருக்கிறார்கள்.

யாத்திரை மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. அடுத்தகட்டமாக தேர்தல் களத்தில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, மக்களை மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாகத் தொடர்பு கொள்வது என வெகு வேகமாக எங்களது பணிகள் தொடரும்" என தமிழக பா.ஜ.க'வின் தேர்தல் பணிகளை பற்றி  தெரிவித்தார்.

இறுதியாக வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க'வின் நம்பிக்கை பற்றி பதிலளிக்கையில் அவர் கூறியதாவது, "இந்தச் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சியினுடைய எம்.எல்.ஏ'க்கள் சட்டமன்றத்தில் நுழைவார்கள் என்பது பா.ஜ.க'வின் நம்பிக்கை. இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்பது எங்களது இலக்கு" என உறுதிபட கூறினார்.

Source - நக்கீரன் 

Similar News