பட்டாவ என் பேருக்கு மாத்திக்கொடு: தி.மு.க. கவுன்சிலர் மீது டீக்கடைக்காரர் பரபரப்பு புகார்!
விழுப்புரம் அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு நீதிமன்றம் வரையில் சென்றவருக்கு பட்டா கிடைக்க விடாமல் தடுத்தது மட்டுமின்றி, தனது பெயருக்கு எழுதிக்கொடுக்கும்படி தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் என்பவர் நிலத்தின் உரிமையாளர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகாவிற்குட்பட்ட தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கனகராசு. இவர் அப்பகுதியை சேர்ந்த பட்டாளம்மாள் என்பவரிடம் கடந்த 1983ம் ஆண்டு 36 சென்ட் நிலத்தை கிரையம் செய்து வாங்கியுள்ளார்.
தற்போது அந்த இடத்தில் 25 ஆண்டுகளாக டீ கடை நடத்தியும், அங்கேயே வசித்து வருகிறார். இதற்கிடையில் அந்த நிலத்திற்கு பட்டா பெறும் முயற்சியிலும் கனகராசு ஈடுபட்டு வருகின்றார். ஆனால் இதற்கு தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் என்பவர் அவரது அடியாட்களுடன் அந்த நிலத்திற்கு பட்டா வழங்கக்கூடாது அதிகாரிகளுடன் இணைந்து தங்களை அலைக்கழிப்பதாக கூறி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் கனகராஜ்.
அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அறிந்த தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன், தன்னுடைய அடியாட்களை கூட்டிக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் விக்கிரவாண்டி தாசில்தார் இளவரசன் உள்ளிட்டோருடன் சேர்ந்துக்கொண்டு ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கனகராஜின் கடையை இடிக்க முற்பட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கனகராஜ் வேண்டாம் என்று தடுத்துள்ளார். அப்போது ஜெயச்சந்திரன் ஆட்கள் கனகராஜ் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட கனகராஜ் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்துள்ளார். உடனடியாக தி.மு.க. கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Abp