"வாக்குறுதி எங்கே?" - திமுக'வை நம்பி ஏமாந்து நிற்கும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கினர்

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு அவர்கள் திரண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-01-02 07:02 GMT

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு அவர்கள் திரண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த செவிலியர்கள் 2400 பேர் நேற்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கடந்த முறை தேர்தலை சந்தித்தபோது தி.மு.க தனது வாக்குறுதியில் இதனை முக்கிய வாக்குறுதியாக செவிலியர்கள் பணி நிரந்தரம் வாக்குறுதியை கொடுத்திருந்தது. அதாவது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இதெல்லாம் செய்வோம் என மொத்தம் 505 வாக்குறுதிகள் கொடுத்திருந்தது, அதில் 356 வது வாக்குறுதியாக அரசு மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும், நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்திருந்தது.

இது போதாது என்று கடந்த முறை அ.தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது ஒப்பந்த செவிலியர்கள் நடத்திய போராட்டம் மற்றும் அனைத்து ஆர்ப்பாட்டத்திற்கும் தி.மு.க வான்டடாக வந்து ஆதரவு அளித்தது. குறிப்பாக கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது மு.க.ஸ்டாலின் 'உயிர்காக்கும் மருத்துவப் பணியில் இருக்கும் செவிலியர்களை நடு ரோட்டில் போராட விடக்கூடாது, அவர்களை போராட விட்ட ஆளும் அரசின் செயல் கண்டிக்கத்தக்கது' என அ.தி.மு.க அரசை விமர்சித்து கடுமையாக பேசி இருந்தார்.

அதாவது செவிலியர்களை போராடவே விடக் கூடாது என பேசிய ஸ்டாலின் இப்பொழுது முதல்வராக இருக்கும் பொழுது செவிலியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது செவிலியர்களை கொதிப்படையை வைத்துள்ளது, அ.தி.மு.க ஆட்சி காலத்திலாவது ஒப்பந்த பணியில் வைத்திருந்தனர் ஆனால் தி.மு.க ஆட்சி காலத்தில் மொத்தமாக பணி நீக்கம் செய்து அனுப்பிவிட்டனர் என செவிலியர்கள் போராட்டத்தில் குதித்துவிட்டனர்.

இதனையடுத்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடும் வெயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் இருந்து செவிலியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்து கொண்டிருக்கின்றனர். போராட்டம் நடத்திவரும் செவிலியர்களிடம் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் நளினி பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் மீண்டும் நிரந்தர பணி ஒப்பந்தம் வழங்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என கூறி செவிலியர்கள் கடும் வெயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பொழுதுதான் இடைநிலை ஆசிரியர்களை சமாதானப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார், அவர்கள் வீட்டுக்கு சென்று சேருவதற்குள் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கி இருப்பது தி.மு.க அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஒவ்வொரு தரப்பினரும் எங்கே வாக்குறுதி என கேட்டு போராடி வருவது தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க'வின் உண்மை முகத்தை காட்டத் துவங்கி விட்டது.


Source - The Tamil hindu

Similar News