'எலும்புத்துண்டு போட்டால் எஜமானருக்கு விஸ்வாசம் காட்டுவார்' செல்வப் பெருந்தகையை கிழித்த ஜெயக்குமார்!
தமிழகத்தில் தி.மு.க.வினரை விட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மறைந்த தலைவர்களை அவதூறாக விமர்சனம் செய்து வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. சார்பாக இப்தார் நோன்று நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின்பு ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக அ.தி.மு.க. சார்பாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பே வாசலில் நின்று இஸ்லாமிய மக்களை கை கூப்பி வரவேற்று நிகழச்சி நடத்தியவர் அம்மா. ஆனால் தி.மு.க.விடம் அப்படி எதிர்பார்க்க முடியாது. அவர்கள் உதட்டில் வேஷம் வைத்து இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்வதாக காட்டிக்கொள்வார்கள்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாள் வந்தாலே, இஸ்லாமியர்கள் பயந்து வாழ்ந்து வந்தனர். எங்கே தி.மு.க. அரசு தங்களை கைது செய்து தீவிரவாதி என்ற பட்டம் சூட்டி விடுமோ என்று அஞ்சிய காலங்கள் உண்டு. ஆனால் அம்மா ஆட்சியில் அனைவரும் சமம். டிசம்பர் 6 அன்று அமைதியான சூழலை ஏற்படுத்தியவர்.
இதற்கிடையில் தி.மு.க.வினரை காட்டிலும் காங்கிரஸ் கட்சியினர் அதிகமாக அ.தி.மு.க.வை விமர்சனம் செய்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே போன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,செல்வபெருந்தகை யார் என்றும், அவர் மீது எத்தனை வழக்குகள் இருக்கிறது தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். அவரை பற்றி தெரிந்துகொள்ள கூகுளில் சென்று தேடிப்பாருங்கள் அவரது நடவடிக்கைகள் தெரியும். மேலும், எஜமானருக்கு விசுவாசம் காட்டுவதற்கு எலும்புத்துண்டு போட்டால் எப்படி வாலாட்டுவார்களோ அதுபோன்றுதான் காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர். இவ்வாறு காட்டமாக ஜெயக்குமார் கூறினார்.
Source, Image Courtesy: Asianetnews